அடையாளம்
உங்கள் ஓராயிரஉயிர் துளிகளில்
ஓர் துளியாய்
உயிர் கொண்டேன்...
எனக்கென எத்தனை
இறந்த கால நினைவுகளை
கொலை செய்தீரோ...
எனக்கென எத்தனைநிகழ் கால நினைவுகளை
நிறுத்தி வைக்கிறீரோ...
எனக்கென எத்தனை
எதிர்கால எதிர்ப்புகளை
எதிர் கொள்ளுவீரோ...
என் உடலசைவில்
என் ஆத்திர கணங்களில்
என் உயிர் சிரிக்கையில்
என் அவசர செய்கையில்
என எல்லா என்னிலும்
உங்கள் முகம் காண்கிறேன்
தோளுக்கு மேல் வளர்ந்தால்
தோழன் என்பார்கள்
உங்கள் தோளில் என்னை
தோழனாய் அன்றோ வளர்த்தீர்...
வயதுப்பசியில்
வரைமுறை தாண்டியிருக்கலாம் ...
வளர்ந்த நாட்களில்
வக்கிரம் ஏறி வருத்தியிருக்கலாம்...
குறைவாய் பேசிய நாட்களுக்கும்
குறையாய் அதிகம் பேசியதற்கும்...
அடுத்த கணமே
மறந்து இருப்பீர்கள்...
ஆனாலும் இதில்
மன்னிப்பு கோருகிறேன்
சொல்ல மறந்து போகலாம்
சொல்ல நினைக்கையில்
இருவரில் ஒருவர்
இறந்து போகலாம்...
உங்களை இழப்பதற்குள்
சொல்லி விடுகிறேன்
நானும் உங்களை நேசிக்கிறேன்!
கண்ணன்
