பார்வையற்று பிறந்ததினால்
எந்த வண்ணமும் புரியாதெனக்கு
புத்தகம் சொன்னது...
நெஞ்சம் தொட்டு திறந்ததினால்
உந்தன் எண்ணமே பிரியாதிருக்கு
இதயம் சொன்னது!
கறுப்புதான் தெரியுமா என்ற
கேள்விகளுக்கு வாதாடி வாதாடி
ஆம் என்று அடங்கி போனேன்
இப்போதோ
உனக்கு கறுப்பு பிடிக்குமென
புண்கண்ணில் புதையல் போல்
கறுப்பை தேடுகிறேன்
தொடுதலில் காண்பவன் நான்
தொட்டு தொட்டு
ஒவ்வொரு பொருளுக்கும் உருகொடுப்பேன்
எத்தனை முறை தீண்டியும்
உன்னை உணர முடியவில்லையே
இது வரமா இல்லை சாபமா?
உன் வாசம் உல்லாசம்
எல்லா வாசங்களும் அமைதியாய் நகர
உன் வாசம் மட்டும் எம்பிக் குதிக்கிறது
நுகர நினைக்கையில் நகர்ந்து போகிறது
மறக்க நினைக்கையில் மடியச் சொல்கிறது
விதவிதமான கோலங்களில்
வார்த்தைகளை அனுபவித்ததுண்டு
மொழியினால்தான் மற்றவைகளின்
அழகையும் பொருளையும் அறிந்தேன்
நீ மொழிகையில்தான் தமிழின்
அதிர்வையும் அருளையும் தெரிந்தேன்
சித்தம் துலக்கும் உன் இதழ்கள்
முத்தம் கொடுக்கும் நொடிகளில் மட்டும்
எம்மொழியிலும் இருக்க முடியாத சத்தங்களையும்
எங்குமே நடக்க முடியாத யுத்தங்களையும்
என் மனதுக்குள் விதைக்கின்றன
மன கட்டுபாடுகளை சிதைக்கின்றன
இருண்டு உருண்ட என் படைப்புகள்
உன் வருகைக்கு பின்
கம்பீரமாய் நடப்பதாய் சொல்கிறார்கள் நண்பர்கள்
துயரம் தவழ்ந்த கவிதைகள்
நம் காதலுக்கு பின்
வானம் தொட எழும்புவதாய்
இதயம் முழுக்க நிரம்புவதாய்
விமர்சனங்கள் உனக்கு சமர்ப்பணம்
ஐம்புலன்களில் ஒன்று பழுதெனினும்
ஆறாம் புலனாய் நீ இருக்க
குறைவென்ன எனக்கு
அகிலம் வேண்டாம்
அமுதும் வேண்டாம்
நீ போதும் உயிர்க்கு...
Monday, September 27, 2010
Subscribe to:
Posts (Atom)
